நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் குஜராத் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணி வீரரான சாய் சுதர்சன் முகமது சிராஜ் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் குவித்தது. இதில் பெங்களூர் அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக முன்னாள் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் அமைந்தார். விராட் கோலிக்கு எதிராக தனது முதல் பந்தை வீச சற்று உணர்ச்சிவசப்பட்ட முகமது சிராஜ், அதற்கு அடுத்து தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
4 ஓவர்கள் பந்து வீசி அவர் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெடுகளை கைப்பற்றினார். இது பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் எப்போது வேண்டுமானாலும் போட்டியை மாற்றக்கூடிய ஒரு வீரர் எனவும், அவர் வெற்றியை தேடி கொடுப்பார் என்று தான் நம்பியதாக தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து சாய் சுதர்சன் விரிவாக கூறும்போது “நான் முகமது சிராஜ் பாயை முழுமையாக நம்புவேன். அவர் ஒரு கேம் சேஞ்சர், அவர் அணிக்குள் கொண்டுவரும் ஆற்றல் மற்றும் அணுகுமுறை ஒட்டுமொத்தமாக அணியையே மாற்றுகிறது. இதை நான் மிகவும் ரசிக்கக்கூடிய ஒருவனாக இருக்கிறேன். சிராஜ் கேம் சேஞ்சர் ஆக இருப்பதால் அவர் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பினேன், அதுவே நடந்தது.
இதையும் படிங்க:இந்த தமிழ்நாட்டு பையன்தான் அடுத்த சுனில் கவாஸ்கர்.. இவர்கிட்ட அந்த விஷயம் அவ்ளோ அற்புதமா இருக்கு – நவ்ஜோத்சிங் சித்து புகழாரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளிலும் நல்ல முறையில் விளையாடினார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு எதிராக பவர் பிளேவை நல்ல முறையில் ஆரம்பித்தார்கள். வலுவான அணியை தோற்கடித்தது எங்களுக்கு தற்போது ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. எனவே நாங்கள் விளையாடும் முறையில் தொடர்ந்து விளையாடி முன்னேறுவோம் என்று நம்புகிறேன்” என சாய் சுதர்சன் கூறி இருக்கிறார்.

