இன்று நடைபெற உள்ள 14வது சீசன் ஐபிஎல் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அதற்கு முன்னர் ஐபிஎல் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க விழாவில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவியை ஒப்படைத்தார். 27 வயதான ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது இந்திய அணிக்காகவும், மகாராஷ்டிரா அணிக்காகவும் விளையாடி வருகிறார். மகேந்திர சிங் தோனிக்கு பிறகு அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்த நிலையில் பலரது பதில் ருத்ராஜ் ஆகவே இருந்தது.
எனவே தற்போது சென்னை அணியும் இவரையே கேப்டனாக நியமித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இவர் அந்த சீசனில் இவர் விளையாடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. பின்னர் 2020ஆம் ஆண்டு வாய்ப்பு பெற்று இவர் 6 போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதங்கள் குவித்திருந்தார். 2021ஆம் ஆண்டு முழு நேர தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 635 ரன்கள் குவித்தார்.
அந்த ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் இவர் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார். 2022ஆம் ஆண்டு சென்னை அணிக்கு மோசமாக அமைய 2023ஆம் ஆண்டு பதினாறு போட்டிகளில் விளையாடி 590 குவித்தார். கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இதனால் சென்னை அணி நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன்சியை ஒப்படைத்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இது முழுக்க முழுக்க தோனி எடுத்த தனிப்பட்ட முடிவே ஆகும் எனவும், இந்த ஆண்டு சீசன் முழுவதும் தோனி விளையாடுவார் என்று கூறியிருக்கிறார். எனவே புதிய கேப்டன்சி குறித்து ருத்ராஜ் கெய்க்வாட் கூறுகையில்
“சென்னை அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரகானே பாய் ஆகியோர் கொண்ட ஒரு கூட்டமே எனக்கு இருக்கிறது.
அவர்கள் என்னை வழிநடத்த இருக்கிறார்கள். அதனால் கேப்டன்சி குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நான் இதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு பாக்கியம். ஒரு பெரிய பொறுப்பு என் கையில் கிடைத்திருக்கிறது. மேலும் அணியில் உள்ள அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள். அதனால் நான் கேப்டன்ஷியில் செய்வதற்கு தனியாக ஒன்றும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
எனவே ருத்ராஜ் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் ருத்ராஜிற்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனவே மகேந்திர சிங் தோனி கேப்டன்ஷியில் இருந்து விலகியது சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தாலும், தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடுவதை நினைத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

