நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்த நிலையில் டு பிளஸ்சஸ் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விராட் கோலி 27 ரன்களில் வெளியேற, பின்னர் பாட்னர்ஷிப் அமைத்த வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதார் கூட்டணி பெங்களூர் அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தியது. வில் ஜேக்ஸ் 41 ரன்களும் பட்டிதார் 52 ரன்கள் குவித்தனர். கடைசி கட்டத்தில் கிரீன் 32 ரன்கள் குவிக்க, பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட போய் விரைவில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை டெல்லி அணியில் கலீல் அகமது இரண்டு விக்கட்டுகளும், ரஷித் சலாம் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. பல போட்டிகளுக்குப் பிறகு வாய்ப்பு பெற்ற வார்னர் இந்த முறையும் சோபிக்கத் தவறி ஒரு ரன்னில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து மெக்கர்க் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு சாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய கேப்டன் அக்சர் பட்டேல் ஓரளவு சிறப்பாக விளையாடி டெல்லி ரசிகர்களை ஆறுதல் படுத்தினார். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்தார்.
அவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தால் டெல்லி அணி 19 ஓவரில் 142 மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தனது ஆறாவது வெற்றியை சிறப்பாக பதிவு செய்தது. பெங்களூர் அணி தரப்பில் யாஷ் தயால் 3 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷல்.. எனது அதிரடி சூழ்நிலையை பொறுத்து அமையும்.. வெற்றிக்கு பின்னர் டேரில் மிச்சல் பேட்டி
இதன்மூலம் பெங்களூர் அணி தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அடுத்த போட்டியில் சிஎஸ்கேவை வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் நிலைமையும் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமைந்தால் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

