இந்திய அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் ரோகித் சர்மா வருகிற டி20 உலகக் கோப்பையோடு குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
மேலும் இவரது ஓய்வுக்குப் பிறகு முழுநேர கேப்டனாக டி20 கிரிக்கெட் தொடருக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க போகிறார் என்றும் தகவல் பரவியது. இந்த நிலையில் துபாயில் உள்ள ஒரு வானொலி சேனலுக்கு ரோகித் சர்மா பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார். இதில் கிரிக்கெட் குறித்தும், தான் கடந்து வந்த பாதை குறித்தும் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“நான் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 17 ஆண்டுகள் ஆகிறது. இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். உங்கள் நாட்டு கேப்டனாக நீங்கள் பணி புரிவது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
ஆனால் நான் கனவிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. என்னிடம் நிறைய மக்கள் பேசி இருக்கிறார்கள். நல்ல மனிதர்களுக்கு நிச்சயமாக நல்ல விஷயம் நடக்கும் என்று கூறி இருக்கிறார்கள். அது கேப்டன் விஷயத்தில் பொருந்தி வருவதை பார்க்கிறேன்.நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நாங்கள் ஒரே அணியாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அதை செயல்படுத்தி வருகிறேன் என்று நினைக்கிறேன்.
நான் எப்போதுமே தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. ஒரு அணியாக 11 பேர் சேர்ந்து அணியை வெற்றி பெற வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தனிப்பட்ட சாதனை என்பது எனது இலக்கு கிடையாது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சங்களை விட நான் சரிவை சந்தித்ததுதான் அதிகம்.
நான் ஒரு நல்ல மனிதனாகவும், விளையாட்டு வீரனாகவும் இருக்கிறேன் என்றால் கடந்த காலங்களில் நான் கண்ட சரிவு மட்டுமே காரணம்” என்று தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரோகித் சர்மா உருக்கமாக பேசியிருக்கிறார். ஆனால் டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவது குறித்து எந்த தகவலையும் ரோகித் சர்மா தெரிவிக்கவில்லை.
இதன் மூலம் இது வதந்தி என்றே நம்பப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தோல்வியினால் இந்த டி20 உலக கோப்பையை நிச்சயம் இந்திய அணி வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. தனிப்பட்ட சாதனைகளுக்காக விராட் கோலி விளையாடுகிறார் என்று ஒரு தரப்பு கூறும் போது ரோகித் சர்மாவின் இந்த பேட்டி தற்போது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

