ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஹைபிரிட் மாடலில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் 23ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஒரே மைதானத்தில் விளையாடினாலும், இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு பவுலரிடம் விக்கெட் கொடுத்தாலும் ஆட்டம் மொத்தமாக மாறிவிடும்.
நெட் பவுலர் அவைஸ் அஹ்மத்
இதன் காரணமாக இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பவுலர் ஒருவரை இந்திய அணி நெட் பவுலராக பயன்படுத்தி வந்துள்ளது. அவர் ரோஹித் சர்மாவுக்கு யார்க்கர் பந்துகளாக வீசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவைஸ் அஹ்மத் பேசும் போது, முதலில் விராட் கோலிக்கு பவுலிங் செய்தேன். அதன்பின் ரோஹித் சர்மா ஸ்ட்ரைக்கில் வந்தார். அதற்கு முன் விராட் கோலியுடன் ரோஹித் சர்மா சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது எந்த திசையில் ஸ்விங் செய்கிறேன் என்று விராட் கோலியுடம் என்னைப் பற்றி ரோஹித் சர்மா கேட்டறிந்தார். அதற்கு விராட் கோலி, இரு பக்கமும் ஸ்விங் செய்கிறேன் என்று கூறினார்.
விராட் கோலியிடம் கேட்ட ரோஹித்
அதன்பின் ஸ்ட்ரைக்கில் வந்த ரோஹித் சர்மா எந்த தவறையும் செய்யவில்லை. மிகச்சிறப்பாக ஆடினார். அந்த நெட் பவுலிங்கிற்கு பின் ரோஹித் சர்மா என்னை பாராட்டினார். ஷாகீன் அப்ரிடியை நகல் எடுத்ததை போல் பவுலிங் செய்தேன். அவரின் கால்களுக்கே குறி வைத்து பவுலிங் செய்ததாக ரோஹித் பாராட்டினார். அது எனக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த பயிற்சி அமைந்துள்ளதாக கருதுகிறேன்.
ரோஹித் சர்மா, விராட் கோலியை சந்திக்க பலரும் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பவுலிங் செய்யக் கூடிய அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. அவர்களுக்கு பவுலிங் செய்த போது எந்த பதற்றமும் இல்லை. ராகவ் பையாவிடம் இருந்து அழைப்பு வந்த போது, நீ நாளை இந்திய அணிக்கு பவுலிங் செய்கிறாய் என்றார். அந்த நேரத்தில் பதற்றம் கொண்டேன் என கூறியுள்ளார்.

