இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தொடரின் 41வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் பாப் டூ பிளசிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியை அதிரடியாக தொடங்கிய இந்த இருவர் கூட்டணி 3.5 ஓவர்களில் 48 ரன்கள் குவித்த நிலையில், முதல் விக்கெட் இழந்தது.
டு பிளஸ்சிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். பின்னர் நிதானமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். மெதுவாக சென்று கொண்டு இருந்த ரன் ரேட்டை மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
பின்னர் கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 32 குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணிதரப்பில் உனத் கட் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது.
வழக்கத்திற்கு மாறாக இந்த போட்டியில் பெங்களூர் அணி மிகச் சிறப்பாக பந்து வீசியது. முதல் ஓவரையே ஸ்பின்னரை வைத்து ஆரம்பித்த நிலையில் அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. வில்ஜாக்ஸ் வீசிய ஓவரை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் மார்க்ரம் 7 ரன்களிலும், நித்திஸ் ரெட்டி 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ளாசன் மூன்று பந்துகளில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் 7 ரன்களில் வெளியேறினார். அப்போதே சன்ரைசர்ஸ் அணியின் சரிவு ஆரம்பித்தது. பின்னர் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாடிய கம்மின்ஸ் 13 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்த நிலையில் கிரீன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க:2009லயே ஆர்சிபி சாம்பியன் ஆகியிருக்கணும்.. ராபின் உத்தப்பா செஞ்ச தப்பு.. ரகசியத்தை நினைவு கூறும் அனில் கும்ப்ளே
இறுதிக்கட்டத்தில் சபாஷ் அகமது 37 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் பெங்களூர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பல தோல்விகளுக்குப் பிறகு பெங்களூர் அணி சந்திக்கும் இரண்டாவது வெற்றியாகும். சன்ரைசர்ஸ் அணி தற்போது தனது மூன்றாவது தோல்வியை சந்திக்கிறது.

