ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறுகிற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தொடங்கையில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இரண்டு அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் மெதுவாகவே இன்னிங்ஸை ஆரம்பித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக முகேஷ் குமாரின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் 11 ரன்கள் குவித்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களில் வெளியேற, ராஜஸ்தான் அணி 36 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதன் பிறகு இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இளம் வீரரான ரியான் பராக் ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய அஸ்வின் 19 பந்துகளில் மூன்று சிக்சர்களை குவித்து 29 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு பல போட்டிகளில் பார்ம் இன்றி தவித்து வந்த ரியான் பராக் இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக தனது அதிரடியை காட்டினார். ஆடுகளமும் மெல்ல மெல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. 45 பந்துகளை எதிர்கொண்ட ரியான் பராக் ஏழு பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என்று விளாசி 84 ரன்கள் குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் 186 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதிரடியாக துவங்கிய இந்த தொடக்க ஜோடியில் மிட்சல் மார்ஸ் 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 23 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து களம் இறங்கிய புய் ஜீரோ ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் டேவிட் வார்னருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்த நிலையில் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய கேப்டன் பந்த் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய ஸ்டெப்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் கொண்டுவர இறுதிக்கட்டத்தில் டெல்லி அணிக்கு ஆறு பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியில் ஆவேஷ் கான் வீசினார். ஆறு பந்துகளில் நான்கு அற்புதமான யாக்கர்களை வீசி ஆவேஸ் கான் அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. டெல்லி அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.

