கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் முதல் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கடைசியாக 2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. மேலும் 2013ஆம் ஆண்டு இந்திய அணி தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று சாதனை படைத்தது. இதனால் பல வருடங்களாக ஐசிசி கோப்பைக்கு ஏங்கிய இந்திய அணியை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் இந்த உலகக் கோப்பை ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். அவர் இந்திய அணியில் விளையாடிய காலகட்டத்தில் உலக கோப்பையை வெல்லாத நிலையில் பயிற்சியாளராக விடைபெறும் சமயத்தில் சாம்பியனாக விடை பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த டி20 உலக கோப்பை வெற்றிக்கு தன்னால் முழு பாராட்டையும் எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இதற்கு காரணம் சீனியர் வீரர்களின் பங்களிப்பினால்தான் சாத்தியமானது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த டி20 உலக கோப்பை வெற்றிக்கு நான் மட்டுமே முழு காரணம் கிடையாது. கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் கீழ் இருக்கும் சீனியர் வீரர்களே இந்திய அணியை அதிகமாக இயக்குகிறார்கள். கேப்டன் ரோஹித் சர்மா உடன் நான் இணைந்து பணியாற்றியது சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கேப்டனாக செயல்பட்டதில் மக்கள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டு விட்டனர்.
இதையும் படிங்க:சொன்னா கேளுங்க.. சிவம் துபேவை தூக்கிடுங்க.. இந்த அதிரடி வீரரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு சல்மான் பட் அட்வைஸ்
பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஸ்டாரர்களாக மாறிவிட்டதால் அவர்களை இயக்குவதும் நிர்வகிப்பதும் கடினம் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது இந்த சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வதில் மிகவும் ஒழுக்கமான வீரர்களாக இருக்கிறார்கள். தங்கள் நெறிமுறைகளில் மிகவும் ஒழுக்கமாக இருப்பதால்தான் அவர்கள் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

