சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு தொடர் தொடங்கி இருக்கிறது.
இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் வில் யங் – ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஷாகீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே வில் யங் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வில்லியம்சன் – டேரல் மிட்சல் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 95 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்து அசத்திய வில்லியம்சன் 89 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த விக்கெட் கீப்பர் டாம் லேதம் டக் அவுட்டாகி ஏமாற்ற, மொத்த பொறுப்பும் மிட்சல் – பிலிப்ஸ் கைகளுக்கு வந்தது. இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர். ஒரு பக்கம் பிலிப்ஸ் அதிரடியில் பட்டையை கிளப்ப, மறுபக்கம் டேரல் மிட்சல் கிளாஸான சதத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார். நிச்சயம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 84 பந்துகளில் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பிரேஸ்வெல் – பிலிப்ஸ் கூட்டணி சிக்சரும், பவுண்டரிமாய் பொளந்து கட்ட, 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களாக இருந்தது. பின்னர் அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் 55 பந்துகளில் அரைசதம் கடக்க, அதன்பின் ருத்ரதாண்வம் ஆடினார்.
ஷாகீன் அப்ரிடி பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, நசீம் ஷா வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்களை விளாசி தள்ளினார். இறுதியாக ஷாகீன் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சரை விளாசிய பிலிப்ஸ், 72 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை எட்டினார். அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 25 ரன்களை விளாசி தள்ளினார்.
கடைசி 22 பந்துகளில் மட்டும் கிளென் பிலிப்ஸ் 7 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 63 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களை குவித்தது. கடைசி வரை களத்தில் இருந்த பிலிப்ஸ் 74 பந்துகளில் 106 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலரான ஷாகீன் அப்ரிடி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

