ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை மறுநாள் பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியன் மற்றும் தொடரை நடத்தும் நாடு என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.
இருந்தாலும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
பரவிய வதந்திகள்
இதனால் ஐசிசி மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை ஹைபிரிட் மாடலுக்கு இந்திய அணி பணிய வைத்தது. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக கட்டப்பட்டு வந்த புதிய மைதானம் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இருந்தாலும் கடாஃபி ஸ்டேடியம் சரியாக கட்டி முடிக்கப்படவில்லை என்று வதந்திகள் பரப்பி கொண்டே இருந்தன.
இதன் காரணமாக இந்திய அணி மீதும், பிசிசிஐ மீதும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வன்மத்தை கொட்ட தொடங்கினர். இந்திய அணி வீரர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கிய நிலையில், மறுபுறம் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் வந்தன. தற்போது கடாஃபி ஸ்டேடியத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஒட்டி, தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
இந்திய கொடி மிஸ்ஸிங்
பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளின் தேசியக் கொடி மட்டுமே கடாஃபி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள இந்தியாவின் தேசியக் கொடி அந்த மைதானத்தில் இடம்பெறவில்லை. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததே காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே இந்தியக் கொடியை பாகிஸ்தான் நிர்வாகிகள் புறக்கணித்திருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

