நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆறு போட்டியில் விளையாடி ஐந்து போட்டியில் பரிதாபமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் குவித்தார்.
ரஜத் பட்டிதார் 50 ரன்களும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என்று 53 ரன்களும் விளாசினார். இதன் மூலம் 196 ரன்கள் குவித்த பெங்களூர் அணி மும்பை அணிக்கு கடின இலக்கினை நிர்ணயித்தது.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். அந்த அணியின் இசான் கிசான் 34 பந்துகளில் 69 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், மூணு சிக்ஸர்கள் என 38 ரன்களும் குவித்தனர்.
அதற்குப் பிறகு கடந்த போட்டியில் 0 ரன்னில் வெளியேறிய சூரியகுமார் யாதவ் இந்த முறை ஒன் டவுனில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மும்பை அணி 15 ஓவர்களில் 199 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னர் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது
“வான்கடேவுக்கு திரும்புவது எப்போதுமே நல்லது. காயம் அடைந்தபோது நான் பெங்களூருவில் இருந்தாலும் மனதளவில் மும்பையில் தான் இருந்தேன்.
நீங்கள் 200 ரன்களை துரத்தும் போது பனிப்பொழிவு சூழ்நிலை அறிந்து விளையாடுவது முக்கியம். ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷான் ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறுவது முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். நான் களத்தில் இது போன்ற ஷாட்களை விளையாடி பயிற்சி பெறுகிறேன். ஸ்லைஸ் ஓவர் பாய்ண்டில் விளையாடும ஷாட் நான் மிகவும் ரசித்த ஒன்று.
இதையும் படிங்க:எதுக்கு நண்பா.. இதெல்லாம் வேணாமே.. ஹர்திக் பாண்டியாவுக்காக களத்தில் இறங்கிய விராட் கோலி
இஷான் கிஷான் தனது பேட்டிங்கில் கடினமாக உழைத்து இப்போது அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். பும்ராவுக்கு எதிராக நான் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏனென்றால் அவர் என் மட்டையை உடைக்கிறார் இல்லை என் காலை உடைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

