இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தோல்விக்குப் பிறகு தோற்றதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் இரண்டாம் பாதியில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தாரோ என தெரியவில்லை. இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது இந்த அதிரடிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் தொடக்க ஆட்டக்காரரான பிரேசர் மெக்கர்க்.
வெறும் பதினைந்து பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அரை சதம் அடித்த அவர் 27 பந்துகளை எடுத்துக் கொண்டு 87 ரன்களை விளாசி தள்ளினார். பின்னர் வந்த வீரர்கள் கணிசமான பங்களிப்பை அளிக்க, டெல்லி அணி மும்பைக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயம் செய்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் திலக் வர்மா கடைசி வரையில் போராடி 63 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும் அவரால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கடைசி ஓவரில் அவர் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்ததால், மும்பை அணியால் வெற்றி பெற முடியவில்லை. மற்ற மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் துரிதமான ரன்களை சேர்த்தனர்.
இதனால் இறுதிவரை போராடிய மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறிய பொழுது
“தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகவும் நெருக்கமாகிவருகின்றன. முன்பு இரு அணிகளுக்கும் இடையே இரண்டு ஓவர்கள் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது இரண்டு பந்துகள்தான் வித்தியாசம் இருக்கிறது.
எங்கள் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கூடுதல் பொறுப்பை பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். இந்த போட்டியில் ஏதாவது செய்திருக்க முடியும் என்றால் மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம். குறிப்பாக இடதுகை பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலின் ஓவரில் அதிக ரன்கள் குவித்திருக்கலாம். இந்த இடத்தில்தான் நாங்கள் போட்டியை தவற விட்டோம்.
இதையும் படிங்க:தொடரும் மும்பை அணியின் சோகம்.. 6வது தோல்வியை சந்தித்த ஹர்த்திக் பாண்டியா.. 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
டெல்லி அணியை பொருத்தவரை ஜாக் பிரேசர் மிகவும் அபாரமாக விளையாடினார். இவரது ஆட்டம் இளைஞர்கள் பயமின்றி விளையாடுவதை காட்டுகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது நல்ல முடிவுதான்” என்று கூறியிருக்கிறார்.

