இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 17வது பட்டத்தை பெறுவதற்கு பத்து அணிகளும் கடும் போட்டி போட்டு மோதுகின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன க்ரீம் ஸ்மித் ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகள் சாம்பியன் பட்டத்தை பெற வாய்ப்பு உள்ளதாக தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. மற்ற அணிகள் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆனால் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பங்கு பெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒன்பதாவது மற்றும் 10-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால் இது தற்போதைய நிலைமை மட்டும்தான். இனி போக போக அணிகளில் ஏற்ற இறக்கம் நிச்சயமாக ஏற்படும்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலுவாக காணப்படுகிறது. 2022ம் ஆண்டு இறுதி போட்டி வரை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2023ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்று வரை தகுதி பெற்றது. ராஜஸ்தான் அணியில் விளையாடும் அனைவருமே சர்வதேச அனுபவம் பெற்ற தரமான வீரர்கள். இதற்கு அடுத்ததாக வலுவான அணிகளில் ஒன்றாக இருப்பது மும்பை இந்தியன்ஸ். தரமான வீரர்களைப் பெற்ற போதிலும், அந்த அணி இரண்டு போட்டியில் தோல்வியடைந்து ரன் ரைட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் 2024-ல் சாம்பியன் பட்டத்தினை வெல்ல மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளைத் தேர்வு செய்து இருக்கிறார் க்ரீம் ஸ்மித். ஆனால் அவரது தேர்வில் வலுவான சென்னை அணி தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து அவர் கூறும் பொழுது
“எப்போதும் போல ஐபிஎல் தொடர் மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் திறமையான இந்திய வீரர்கள் மற்றும் தரமான வெளிநாட்டு வீரர்களை கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு தொடரில் முன்னோக்கிச் செல்ல மிகவும் உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சில் பிரச்சனை இருந்தது. ஆனால் தற்போது பும்ரா மும்பை அணிக்கு திரும்பியிருப்பதால் அந்த அணி மிகவும் வலுவாகக் காணப்படுகிறது. இந்த முறை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான ஊதா நிறத் தொப்பியை பும்ரா பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க:
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆரஞ்சு தொப்பியை வெல்ல இவர்களிடையே கடும் போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். புதிய பந்தில் போல்ட் மிகவும் தரமான பந்துவீச்சாளர் மற்றும் சுழற் பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் வலுவாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

