2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த வருடம் மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களை அறிவிப்பதற்கான கடைசி தேதியை பிசிசிஐ நிர்ணயித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி ஐபிஎல் விளையாடும் அனைத்து அணிகளும் தங்களது தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இந்நிலையில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் சிஎஸ்கே அணியின் பக்கம் திரும்பி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்க வைத்துக் கொள்ளும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரின் முடிவின்போது ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதியை பொறுத்து அடுத்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என எம்எஸ் தோனி குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் கடந்த வருடங்களில் நடைமுறையில் இருந்த அன் கேப்டு வீரர் விதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி 5 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் உள்நாட்டு வீரர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள 4 கோடி ரூபாய் கொடுத்தால் போதுமானது. இந்த விதிமுறை ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து 2021 ஆம் வருடம் வரை நடைமுறையில் இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் நீக்கப்பட்டு இருந்த இந்த விதி தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 2019 ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி கடந்த 5 வருடங்களாக ஐபிஎல் போட்டி மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவரை உள்நாட்டு வீரராக கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி தக்க வைக்க முடியும். இந்த முறையில் தோனி ரீடைன் செய்யப்படும்போது அவருக்கு 4 கோடி ரூபாய் கொடுத்தால் போதுமானது. இதன் மூலம் தோனியை அணியில் ரீடைன் செய்வதோடு ஏலத்தில் மற்ற வீரர்களை எடுப்பதற்கும் சிஎஸ்கே அணிக்கு வசதியாக இருக்கும்.
இதனால் மகேந்திர சிங் டோனி உள்நாட்டு வீரராக சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என பல கிரிக்கெட் விமர்சிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சர்வதேச வீரராகவே ரிடைன் செய்வேன் என தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் நான் சிஎஸ்கே அணியின் தலைமையில் இருந்தால் மகேந்திர சிங் தோனி, ரூத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் பத்திரனா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்வேன்.
மேலும் ஆறாவது வீரராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த உள்நாட்டு வீரரான சமீர் ரிஸ்வியை தக்க வைப்பேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் எம்எஸ் தோனியை உள்நாட்டு வீரராக இல்லாமல் சர்வதேச வீரராகவே தக்க வைப்பேன் எனவும் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். தற்போது பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்திருக்கும் புதிய விதியால் சர்வதேச வீரர்களான விஜய் சங்கர், சந்திப் ஷர்மா மற்றும் பியூஸ் சாவ்லா போன்ற வீரர்களையும் உள்நாட்டு வீரர்களாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

