இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி தனது 42 வயதிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை, பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்னர் துபாய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மகேந்திர சிங் தோனி தொழில் முறை கிரிக்கெட்டை பொருத்தவரை வயதாகிவிட்டது என்பதற்காகவெல்லாம் யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.
தற்போது சென்னை அணிக்காக 42 வயதிலும் விளையாடிக் கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் களமிறங்கினாலும் குறைவான பந்துகளை சந்தித்து அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் எந்த ஒரு குறையும் இன்றி இளம் வீரர்களுக்கு நிகராக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தனது காலில் காயம் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் களமிறங்கி விளையாடினார். மேலும் இளம் வீரர்களை போல சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை என்றாலும், உடற்பயிற்சி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது அவசியம் என்றும் மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார்.
இந்தப் பேட்டியில் அவர் விரிவாக கூறும்பொழுது
“கிரிக்கெட்டை பொருத்தவரை கடினமான விஷயம் என்னவென்றால் நான் இந்த ஆண்டு ஐபிஎல் ஐ தவிர எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. இதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியம். உடற்தகுதியுடன் இருக்கக்கூடிய இளம் வீரர்களுடன் நான் போட்டி போட்டாக வேண்டும்.
அவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள். வயதாகிவிட்டது என்ற காரணத்தினால் யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள். நீங்கள் விளையாட வேண்டும் என்றால் மற்ற வீரர்களைப் போல நீங்களும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால் வயது உங்களுக்கு அந்த கருணையை வழங்காது. இதற்கு உடற்பயிற்சியும், நல்ல உணவு பழக்க வழக்கங்களும் மிகவும் அவசியம்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் போடும் பலே திட்டம்.. சிஎஸ்கேவின் பிராவோவை தட்டி தூக்கியது.. டி20 உலக கோப்பை குறியா?
நல்ல வேலையாக நான் சமூக வலைதளங்களில் அதிகமாக ஈடுபடுவதில்லை. இதனால் எனக்கு கவனிச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கூறியிருக்கிறார். மகேந்திர சிங் தோனி சமூகவலைதளத்தில் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம்தான் அதிகம் பிடிக்கும் எனவும் கூறியிருக்கிறார். தற்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ள மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கட்டாயம் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

