டி20 உலக கோப்பை அடுத்த மாதம் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணியும் இந்த முறை கோப்பையை வெல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த 50 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்ற நிலையில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தியது. அதற்கு முக்கிய காரணமாக இந்தியாவின் அஜய் ஜடேஜாவை பயிற்சியாளராக நியமித்தது.
அவரின் வழிகாட்டுதலின் மூலம் ஆப்கானிஸ்தான அணி அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி அருகே வந்து கோட்டை விட்டது. இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பையை எதிர்நோக்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கேவின் தற்போது பவுலிங் ஆலோசகராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ப்ராவோவை பவுலிங் ஆலோசகராக நியமித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாம்பியன் வீரரான பிராவோ அந்த அணி வென்ற இரண்டு டி20 உலக கோப்பை அணிகளிலும் இருந்துள்ளார். மேலும் நடைபெற்ற வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இவர் தற்போது சென்னை அணியின் பௌலிங் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளதால், அந்த நாட்டைச் சேர்ந்த வீர தங்கள் அணியின் ஆலோசகராக இருந்தால் அது அணியின் வெற்றிக்கு பெரிதாக கை கொடுக்கும் என்று நம்பி பிராவோவின் பக்கம் ஆப்கானிஸ்தான் அணி சென்றுள்ளது. இவரின் ஆலோசனையின் மூலம் ஆப்கானிஸ்தான் பெரிய வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான், முகமது நபி, குர்பாஸ் அகமது போன்ற டி20 ஸ்பெசலிஸ்ட் வீரர்கள் இருப்பதால் நிச்சயமாக இந்த முறை ஆப்கானிஸ்தான அணி எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பது சந்தேகமே இல்லை. மேலும் டி20 உலக கோப்பை அட்டவணையிலும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டி வரை செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் குரூப் சுற்றில் நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் நியூசிலாந்து அணி மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும். மற்ற அணிகளை ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் பட்சத்தில் அரை இறுதி வரை ஆப்கானிஸ்தான் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

