நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய பிறகு வெற்றிக்கான முக்கிய காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார். அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்த கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது.
லீக் போட்டிகளில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திய ஸ்டார்க் முக்கியமான கட்டத்தில் அணிக்கு அபாரமாக செயல்பட்டார். சன்ரைசர்ஸ் அணியின் ஆபத்தான பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே போல்ட் முறையில் வெளியேற்றினார். அதன் பிறகு நித்திஷ் ரெட்டியையும் ஒன்பது ரன்களில் வீழ்த்தினார்.
அதன் பிறகு சபாஷ் அகமதுவையும் முதல் பந்திலேயே வெளியேற்ற, சன்ரைசர்ஸ் அணி தட்டு தடுமாறி 159 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ராகுல் திருப்பாதி மட்டும் 55 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். கொல்கத்தா அணித்தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஸ்டார்க் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பிறகு களம் இறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் மூலம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது
“எங்கள் அணியின் செயல்பாடுகளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொறுப்பு என்பது மிகவும் முக்கியம். அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியது அற்புதமாக இருந்தது. தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும்.
மேலும் நிகழ்காலத்தில் இருப்பது மிகவும் முக்கியம். இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள் என்பதால் அதை நன்றாகவே செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இன்று ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அற்புதமாக செயல்பட்டனர். பந்து வீச்சில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கும் பொழுது அதை பயன்படுத்துவது பரவசமாக இருக்கும். குருபாஸ் விளையாடிய ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர் முதல் போட்டியில் விளையாடினாலும் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதையும் படிங்க:இந்தப் போட்டியை விடுங்க.. சென்னையில தான் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.. தோல்விக்குப் பிறகு பேசிய பேட் கம்மின்ஸ்
நானும், வெங்கடேஷ் ஐயரும் விளையாடும் போது வெங்கடேஸ் என்னிடம் தமிழில்தான் பேசுவார். தமிழ் எனக்குப் புரிந்தாலும் பேச வராது. அதற்கு நான் அவரிடத்தில் இந்தியில்தான் பதிலளிப்பேன். இதற்குப் பிறகு நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடப் போகிறோம். அதனால் எங்களுடைய ஜோனில் நாங்கள் இருக்க வேண்டும். எங்களால் கொடுக்க முடிந்தவற்றில் சிறப்பானதா கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

