நடப்பு ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பத்து அணிகளும் முதல் போட்டியில் பங்கு பெற்று இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் பங்குபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் நீடிக்கிறது.
சென்னை அணியும் மிக வலுவாகவே இருப்பதால் இந்த முறையும் சென்னைக்குதான் கோப்பை என்று ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பதிவிட ஆரம்பித்து விட்டனர். பேட்டிங்கில் மிக வலுவாக இருந்த சென்னை அணி பந்து வீச்சில் சிறிய குறை இருப்பது போல் தெரிந்த நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காயத்திலிருந்து குணமாகி மீண்டும் சென்னைக்கு திரும்பியதால் பந்து வீச்சிலும் சென்னை அணி லுவாகவே தெரிகிறது.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு வீரராகவே போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே நான்கு முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், தான் கேப்டனாக வழி நடத்தும் கடைசி தொடரில் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஏக்கம் 2023ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் தெரிந்தது.
குஜராத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பங்கு பெற, அதில் கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மகேந்திர சிங் தோனி அப்பொழுது கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்த தருணத்தை அனைவரும் காண முடிந்தது.
கடைசி இரண்டு பந்துகளை மோகித் சர்மா வீச அதனை எதிர்கொண்ட ஜடேஜா முதல் பந்தில் அற்புதமாக ஒரு சிக்சரை அடித்து இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை அணி ஐந்தாவது கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இதனைப் பார்த்த மகேந்திர சிங் தோனி மைதானத்திலேயே ஜடேஜாவை தூக்கிய சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஜடேஜா கலந்து கொண்டனர். அப்போது நிருபர் கேட்ட கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா பதில் அளித்த விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ஜடேஜா
“மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்க்ஷி அண்ணிக்குப் பிறகு தோனியால் தூக்கப்பட்ட ஒரே ஆண் நபர் நானாகத்தான் இருப்பேன்” என்று நகைச்சுவையாக கூறினார்.
இதனைக் கேட்ட மகேந்திர சிங் தோனி மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. தோனி ஜடேஜாவை தூக்கிய அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி அதிக லைகுக்களை பெற்ற புகைப்படமாகவும் உள்ளது.

