அயர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர் கொள்ள தயாராக உள்ளது.
முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இந்த போட்டியை எதிர்கொண்ட இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. ஏனென்றால் இந்த ஆடுகளம் இந்திய அணிக்கும் புதிது என்ற காரணத்தால் முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.
எதிர்பார்த்தது போலவே அயர்லாந்து அணியினர் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டெர்லிங் இரண்டு ரன்களில் வெளியேறினார். பின்னர் அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டிலானி 14 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என 26 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் அயர்லாந்து அணியினர் 96 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தது. இந்திய அணித்தரப்பில் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். அதில் பும்ரா சிறப்பாக பந்து வீசி மூன்று ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 12 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டிக்கு பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா நியூயார்க் ஆடுகளம் குறித்து கூறும் பொழுது
“இந்தியாவிலிருந்து இங்கே வந்து பந்து வீசும் போது பந்துவீச்சாளர்களுக்கு பவுன்ஸ் மற்றும் வேகம் இந்த ஆடுகளத்தில் இருக்கிறது. இதை நான் ஒருபோதும் புகாரோ குறையோ சொல்ல மாட்டேன். நீங்கள் உங்களது செயலில் ஊக்கம் உள்ள வீரராக இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க முடியாது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அந்த நேரத்தில் தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து அதில் உங்களுக்கு என்ன வேலை என்பதை பின்பற்ற வேண்டும். இந்திய ஆடுகளத்திற்கும் இங்குள்ள ஆடுகளத்திற்கும் வித்தியாசம் இருக்கும் என்பதால் அனைத்து சூழ்நிலைகளிலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு எதிரா நாங்க என்ன பண்ண போறோம்னு தெரியல.. அயர்லாந்து அணியை ஜெயிக்கவே இதுதான் காரணம்.. ரோஹித் சர்மா பேட்டி
இந்தப் போட்டியில் அந்த வகையில் நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை இதே நியூயார்க் மைதானத்தில் வருகிற ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் அணியிலும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்தப் போட்டி இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

