இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை டி20 போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார்.
மேலும் அடுத்த போட்டியான பாகிஸ்தான் அணியிடனும் இதே மைதானத்தில் இந்திய அணி மோத உள்ளதால் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.
நியூயார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களம் இறங்கிய அயர்லாந்து அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் விரைவிலேயே விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் 16 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி ஒரு ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 37 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் குவித்த நிலையில் 52 ரன்கள் உடன் இருந்தபோது தோள்பட்டை வலி காரணமாக பாதியில் வெளியேறினார்.
பின்னர் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். நியூயார்க் ஆடுகளம் தொடக்கத்தில் இருந்தே பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய அனுபவத்தின் காரணமாக இந்த ஆடுகளத்தில் சரியான லைன் அண்ட் லெந்தில் எங்களால் வீச முடிந்தது என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விரிவாக கூறும் பொழுது
“இந்த ஆடுகளத்தின் தன்மையை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தயாரிக்கப்பட்டு ஐந்து மாதங்களதான் ஆகிறது. நாங்கள் பேட்டிங் செய்த பொழுதும் கூட ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக மாறவே இல்லை. இங்கு பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருக்கிறது. சரியான லைன் அண்ட் லெந்த்தில் வீசினால் பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் ஒரு சொர்க்க பூமி.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதால் அவர்களுக்கு இந்த ஆடுகளத்தின் தன்மை புரியும். மேலும் இந்த மைதானத்தில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு விளையாட முடியாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தான் பந்துவீச்சாளர்களை மாற்ற முடியும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எங்கள் திட்டம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு.. தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. முழு விபரம்
இந்த ஆடுகளத்தில் என்ன பெறலாம் என்பது குறித்தும் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான்அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சிறிது நேரம் செலவு செய்து ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

