ஜிம்பாப்வே தொடருக்காக அனுப்பப்பட்ட இந்திய இளம் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி கேப்டனான சுப்மான் கில் இந்திய கேப்டன்களுக்கு கீழ் தான் விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய இளம் வீரரான சுப்மான் கில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். மேலும் தனது சிறந்த பேட்டிங் திறமையாலும் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஒரு பேட்ஸ்மேன் ஆக பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், கேப்டன் ஆகும் வாய்ப்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அமைந்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தாலும், அதன் பிறகு தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அதற்கு அடுத்த நான்கு போட்டிகளையும் வெற்றி பெற்று டி20 தொடரையும் சிறப்பாக இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த டி20 தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசிய கில் இந்திய அணியில் தான் அதிகம் ரசித்த கேப்டன் குறித்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து கில் விரிவாக கூறும்பொழுது “இந்த உணர்வு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து இருந்தாலும் அதற்கடுத்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது டி20 தொடரையும் வென்றிருப்பது ஒரு அற்புதமான உணர்வு. எங்கள் வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறந்து விளங்கினோம்.
நான் அதிகம் எதிர்பார்க்கும் கேப்டன் குறித்து கூறினால் மஹி பாய், ரோஹித் பாய், விராட் கோலி மற்றும் ஹர்திக் பாய் ஆகியோரிடம் இருந்து நீங்கள் சிறந்த குணங்களைப் பெறலாம். ஒவ்வொருவருக்கும் அற்புதமான குணங்கள் இருக்கின்றன. மேலும் நான் ரோகித் சர்மா தலைமையின் கீழ் அதிகம் விளையாடியிருப்பதால் நான் அதிகம் எதிர்பார்க்கும் கேப்டன்களில் அவர் ஒருவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:என் முடிவு இதுதான்.. என்னால அவ்வளவு சீக்கிரம் இதை மாத்திக்க முடியாது.. ஒரு நாள் மட்டும் டெஸ்ட் தொடர்களில் ஓய்வு குறித்து ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பைக்கு முன்பாக கில் டி20 தொடர்களில் பெரிதாக விளையாட விட்டாலும் அவர் உலகக் கோப்பை அணியிலும் நீடித்தார். அவரது திறமையை அறிந்த ரோகித் சர்மா கில்லைத் தொடர்ந்து அணியில் இருக்கும் படியும் பார்த்துக் கொண்டார். மேலும் டி20 ஃபார்மேட்டில் இருந்து ரோகித் சர்மா தற்போது தனது ஓய்வினை அறிவித்திருப்பதால் இனி அடுத்து வரும் சர்வதேச டி20 தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. இந்திய அணி அடுத்தது இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

