அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியின் மூலம் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார் இந்திய அணி வீரர் அஸ்தீப் சிங். இவரது பந்துவீச்சே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
போட்டிக்கு முன்பாக நிம்மதி இன்றி தவித்ததாகவும் ரோகித் சர்மா தன் மீது வைத்த நம்பிக்கையே நான் நன்றாக செயல்பட காரணம் என்றும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பந்து வீச்சுக்கு முழுக்க முழுக்க சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓரளவு சுமாரான பங்களிப்பையே வெளிப்படுத்தினார் ஹர்ஸ்தீப் சிங். ஆனால் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அமெரிக்க அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நான்கு ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவரது பந்து வீச்சில் முகமது சிராஜ் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிடவில்லை என்றால் ஐந்தாவது விக்கட்டையும் இவரே வீழ்த்தி இருப்பார். இவரே தற்போது பத்து ஆண்டுகால அஸ்வினின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார்.
தனது சிறந்த பந்துவீச்சு குறித்து அர்ஸ்தீப் சிங் கூறுகையில்
“கடந்த இரண்டு போட்டிகளில் நான் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் கொடுத்தேன். அதனால் இந்த போட்டிக்கு முன்பாக நிம்மதி இன்றி சில குழப்பமான மன நிலையில் இருந்தேன். ஆனால் ரோஹித் சர்மாவும், அணி நிர்வாகமும் என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்புகளை கொடுத்தனர்.
ரோகித் சர்மா என் மீது வைத்த நம்பிக்கைக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சரியான பந்துகளை வீசினாலே போதும் அதை ஆடுகளம் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்து ஒவ்வொரு பந்தையும் வீசினேன். அதேபோல ரன்கள் குவிப்பதற்கான இடத்தில் பந்துகளை வீச கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
இதையும் படிங்க:நான் தவறு செய்யும் போது என்னை திருத்த இவர் இருக்கிறார்.. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.. ரிஷப் பண்ட் பேட்டி
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சில பணிகள் என்று தவறாமல் இருக்கும். குறிப்பாக உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு வீரரும் செய்ய வேண்டியது அவசியம். அது எனக்கு தற்போது நன்றாக பயன் அளிக்கிறது. இந்த போட்டியில் பந்து வீசிய அனைவருமே நன்றாக செயல்பட்டார்கள். அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை வருகிற சனிக்கிழமை கனடா அணியோடு எதிர்கொள்ள உள்ளது.

