நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த வேகப்பந்து வீச்சாளர் போட்டி குறித்து சில முக்கிய காரணங்களைக் கூறியிருக்கிறார்.
நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் நல்ல முறையிலே பேட்டிங் செய்தது. 89 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று இருந்த நிலையில் மேற்கொண்டு 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் பார்த்தபோது வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் இந்திய அணியினரின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இந்தியாவின் பந்து வீச்சாளரான பும்ரா நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் பும்ரா கூறும்பொழுது
“இந்த வெற்றி நிஜமாகவே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொருத்தவரை நான் ஆரம்பத்திலேயே போட்டி சமநிலையில் இருப்பதாகவே அறிந்தேன். மழை பெய்து நின்ற பிறகு சூரியன் வெளியே வந்த போது ஆடுகளம் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். இதனால் பந்துவீச்சில் மட்டும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
என்னால் முடிந்த வரை சீமில் வீசவும், இறுதி கட்ட ஓவர்களில் சிக்கனமாக பந்து வீசவும் முடிவு செய்தேன். இது எல்லாமே தற்போது நன்றாக அமைந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாங்கள் இந்தியாவில் விளையாடியதை போன்றே உணர்ந்தோம். இங்குள்ள ரசிகர்களின் ஆதரவு என்னை பிரம்மிக்க வைக்கிறது. தொடர்ந்து நாங்கள் போட்டிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி”என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா.. பும்ரா அபாரமான பந்துவீச்சு.. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த பும்ராவே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் வீழ்த்தி இருக்கிறது.

