இந்தியாவில் உள்ள பிரபலமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக கருதப்படுவது மும்பையில் உள்ள வான்கடே மைதானம். இதன் 50வது ஆண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக ரோஹித் சர்மா கலந்து கொண்டார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மா அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அதற்குப் பிறகு அவரது தலைமையில் முன்னணி அணிகளுக்கு எதிராக இந்திய அணி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதற்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்று முன்னணி அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது.
மேலும் பேட்டிங்கிலும் ரோஹித் சர்மா சொதப்பி வருவதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானில் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ரோஹித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதில் சாம்பியன்ஸ் டிராபிக் கோப்பையை ரோஹித் சர்மா வென்றால் இன்னும் இரண்டு வருடம் இந்திய அணியின் கேப்டனாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே இது இந்திய அணிக்கு மட்டுமின்றி ரோஹித் சர்மாவுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துகொள்ள உள்ள இந்திய வீரர்களின் தேர்விலும் ரோஹித் சர்மா அதிக அளவு ஈடுபாடு கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது போன்று இந்த ஆண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று மும்பைக்கு கொண்டு வருவேன் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:இளைஞர்களுக்கு வழி விடுங்க பாஸ்.. ரோஹித்தின் திடீர் பல்டி.. சீனியர்களின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன.? அஜித் அகர்கரின் முக்கிய அப்டேட்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “எல்லா வகையிலும் முயற்சி செய்யத் தயாராக இருக்கிறோம். ஐசிசி தொடரைப் பொறுத்தவரை இந்திய அணியை பிரதிநிதிப்படுத்துவது என்பது ஒரு கனவு போன்றது. இது மீண்டும் ஒரு கனவாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். நாங்கள் துபாய் சென்று விளையாடும் போது 140 கோடி இந்திய மக்களின் ஆதரவு எங்களுக்கு பெரிய அளவில் இருக்கும். வான்கடே மைதானத்திற்கு மீண்டும் ஒரு கோப்பையை கொண்டு வர தயாராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்

