ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இதனைத் தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானில் நடக்க வேண்டிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை, ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுவதற்கு காரணமே இந்திய அணிதான்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இம்முறை இந்திய அணியை அரையிறுதி சுற்றுக்கே நுழையவிடக் கூடாது என்பதில் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.
ஹர்பஜன் சிங் கருத்து
இதற்காக இரு அணிகளின் வீரர்களும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த போட்டியில் நிச்சயம் சுவாரஸ்யம் இருக்காது.
ஏனென்றால் இந்திய அணி மிகவும் வலிமையான அணி. சமீபத்தில் கூட பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை பெற்றது. பாகிஸ்தான் அணியிடம் ஒரு இன்கன்சிஸ்டன்சி எப்போதும் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தரவுகளை எடுத்து, இந்திய வீரர்களின் தரவுகளுடன் ஒப்பிடும் போது, உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, வித்தியாசம் மிகப்பெரியளவில் இருக்கிறது. இந்திய அணி கூடுதல் வலிமையுடன் இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை எடுத்துவிட்டு பார்த்தால், மிகவும் வலிமை குறைந்த அணியாக உள்ளது. அவர்கள் இருவரை தவிர்த்து, வேறு எந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை.
ஃபக்கர் ஜமான் சராசரி
இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாமின் சராசரி வெறும் 31தான். ரிஸ்வானின் பேட்டிங் சராசரி வெறும் 25 மட்டும்தான். ஃபக்கர் ஜமானின் சராசரி மட்டுமே 46. அவரால் மட்டுமே இந்திய அணியிடம் இருந்து ஆட்டத்தை மாற்றி கொண்டு செல்ல முடியும். அவர்களின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது, அந்த அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

