ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்: ஹாங்காங் நாட்டில் நடைபெற்று வருகின்ற ஹாங்காங் சிக்ஸஸ் தொடரானது, வெறும் 6 ஓவர் கொண்ட போட்டியாகும். இதில், பூல் C-இல் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பாவின் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் தோல்வி அடைந்தது. பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டமான இன்று களம் இறங்கியது இந்திய அணி. காலிறுதி இடத்தைப் பிடிக்க ஒவ்வொரு அணியும் மும்மரம் காட்டும் நிலையில், இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் வெறும் ஒரு ரன்னில் தோல்வியுற்றது.
இந்திய அணி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஸ்கோர் கார்டு:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் துவக்க வீரரான காலித் ஷா 10 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து 42 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த, முஹம்மது ஜுஹைப் 17 பந்தில் 5 ரன்களும், ஜாகூர் கான் 37 பந்தில் 11 ரன்களும் சேர்த்தனர். ஆட்ட முடிவில், 6 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்திருந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி.இந்திய அணிக்கு, 6 ஓவர்களில் 131 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி.
இந்திய தரப்பில் துவக்க வீரர்களாக களம் இறங்கிய பாரத் சிப்லி 6 பந்துகளில் 20 ரன்களும், மனோஜ் திவாரி 3 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். ராபின் உத்தப்பா தரப்பில், 10 பந்துகளில் 43 ரன்களும் சேர்த்து, 3 ஃபோர் மற்றும் 5 சிக்ஸர்களும் அடித்து இருந்தார். கடைசியாக களம் இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆடாமல் 6 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டூவர்ட் பின்னி மட்டுமே, 11 பந்துகளில் 44 ரன்களை எடுத்து, 1 ஃபோர் மற்றும் 4 சிக்ஸர்களையும் விளாசி, தனி ஒருவராக போராடிக் கொண்டிருந்தார். கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்,1 ரன்க்காக ஓடிய ஸ்டூவர்ட் பின்னி ரன் அவுட் ஆனார்.
ஆட்டம் முடிவில், இந்திய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வெறும் 1 ரன்னில், ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் பொன்னான வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

