இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாள் முழுவதும் மழையால் ரத்தானது.
இரண்டாம் நாளான இன்று டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மேகமூட்டமான வானிலை மற்றும் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஸ்விங்கை அளித்தது. இதனை நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணியை உலுக்கினர்.
ரோஹித் 2, கோலி 0, சர்பராஸ் 0 மூவரும் வெளியேற 10/3 என இந்தியா தடுமாறிய போது ஜெய்ஸ்வால் மற்றும் பண்ட் சற்று நிலைத்து ஆடி நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் அது வெகு நேரம் நிலைக்கவில்லை. ஜெய்ஸ்வால் 13 ரன்களில் வெளியேற உடனே அடுத்தடுத்து ராகுல் 0, ஜடேஜா 0, அஷ்வின் மூவரும் டக் அவுட் ஆக இந்திய அணி மீட்கப்பட முடியாத அளவு சரிந்தது.
மறுபக்கம் தனி ஆளாக ஆடி வந்த பண்ட் 20 ரன்னில் பெவிலியன் கிளம்ப இந்திய 46 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் பல்வேறு மோசமான சாதனைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ஹென்ரி (5 விக்கெட்டுகள்) மற்றும் ஒரூக்கே (4 விக்கெட்டுகள்) இருவரும் தொடர்ந்து மாறி மாறி துல்லியமாக பந்துவீசி இந்திய அணியை அடக்கினர்.
சொந்த ஊரில் இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1987ல் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டெல்லியில் 76 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் என அனைத்து மைதானங்களையும் கணக்கில் எடுத்தால் இந்தியாவுக்கு இது 3வது குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்.
இந்திய அணியின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் :
36 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2020
42 – இங்கிலாந்துக்கு எதிராக, 1974
46 – நியூசிலாந்துக்கு எதிராக, 2024 *
இந்திய அணியின் பேட்டிங்கில் டாப் 7 வீரர்களில் 4 வீரர்கள் டக் அவுட் ஆவது 92 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை இந்தியாவுக்கு நிகழ்கிறது. மொத்தமாக இந்த இன்னிங்சில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகியதன் மூலம் இந்திய மைதானத்தில் அதிகபட்ச இந்திய வீரர்கள் டக் ஆகிய சாதனையை சமன் செய்துள்ளது.
இந்திய மைதானங்களில் ஒரு இன்னிங்சில் அதிக டக் ஆன வீரர்கள் எண்ணிக்கை :
5 – நியூசிலாந்துக்கு எதிராக, 1999 – மொகாலி
5 – நியூசிலாந்துக்கு, 2024 – பெங்களூரு *

