2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 12 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆர்சிபி அணி முதலிடத்திலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்தத் தொடரின் 13ஆவது போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோத உள்ளன.
முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி கொல்கத்தா அணியை 116 ரன்களில் ஆல் அவுட் செய்தனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுகவீரரான அஸ்வினி குமார் மிகச் சிறப்பாக பந்து வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர் அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஐபிஎல் தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வினி குமார்.
இதுவரை 2 முதல் தரப் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியிருக்கும் இளம் வீரரான அஸ்வினி குமார் தனது அறிமுக போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மேலும் தொடர்ச்சியாக திறமை மிக்க இளம் வீரர்களை அறிமுகம் செய்யும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, திலக் வர்மா என மும்பை அணியால் அறிமுகம் செய்யப்பட்ட பல இனம் வீரர்களும் இன்று சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக வலம் வருகின்றனர். அவர்கள் வரிசையில் அஸ்வினி குமாரும் இணைவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் விளையாடியது குறித்த அனுபவத்தை ரவி சாஸ்திரியுடன் பகிர்ந்து கொண்டார் அஸ்வினி குமார்.
இது தொடர்பாக முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது பேசிய அவர் போட்டியில் விளையாடுவதற்கு முன் பதட்டம் இருந்ததாக தெரிவித்தார். உங்களது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான சாதனையை படைத்திருக்கிறீர்கள். போட்டிக்கு முன்பாக என்ன உணவு எடுத்துக் கொண்டீர்கள் என ரவி சாஸ்திரி கேட்டார். இதற்கு பதிலளித்த அஸ்வினி குமார் பதட்டத்தின் காரணமாக மதிய உணவு சாப்பிடவில்லை என குறிப்பிட்டார். ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாழைப்பழத்தை உங்களது பையில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சிறப்பான முடிவுகளை கொடுக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வந்த மும்பை அணி வெற்றியின் பாதைக்கு திரும்பி இருக்கிறது. 12 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 10 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றிருப்பதால் இந்த வருட ஐபிஎல் தொடர் பரபரப்பாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

