பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இதற்குக் காரணம் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மட்டுமின்றி கேப்டன் ரோஹித் சர்மாவின் அற்புதமான தலைமைத்துவமும்தான் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மாவை பாராட்டி வருகின்றனர்.
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி விளையாடிய போது குறைந்த ரண்களின் காரணத்தால் இந்திய அணியின் முதல் ஓவர் முக்கிய பௌலரான பும்ராதான் வீசுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில்தான் ரோகித் சர்மா தான் அவசரப்படாமல் நிதானமாக முதல் ஓவரை ஹர்ஸ்தீப் சிங்குக்கு வழங்கினார். அதன் பிறகு முகமது சிராஜ்க்கு ஓவர் கொடுத்தபின், கடைசியாக பவர் பிளேவின் இரண்டு ஓவர்களை பும்ராவுக்கு வழங்கினார். இதே இடத்தில் வேறு எந்த கேப்டன் ஆவது இருந்திருந்தால் முதல் ஓவரை பும்ராவைத்தான் வீச வைத்திருப்பார்கள் என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
இது குறித்து ராபின் உத்தப்பா விரிவாக கூறும்பொழுது
“இந்த சூழ்நிலையில்தான் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை நான் பார்த்து வியந்தேன். அது மிக அற்புதமாக இருந்தது. இதுவே ரோஹித் சர்மாவின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயமாக 119 ரன்களுக்கு முதலிலேயே பும்ராவை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா வேறு விதமாக யோசித்து முதல் ஓவரை அர்ஸ்தீப் சிங்கை வீச வைத்தார்.
பின் இரண்டாவது ஓவரை முகமது சிராஜூக்கு கொடுத்துவிட்டு அதற்குப் பிறகு மீதம் இரண்டு ஓவரையும் பும்ராவுக்கு கொடுத்தார். அவர் அனைத்து பவுலர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் என்பதுபோல அனைவருக்கும் அவர் அனுமதி வழங்குகிறார். இதனால்தான் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த பும்ரா ஐந்தாவது ஓவரில் கேப்டன் பாபர் ஆசமை சாய்த்தார். இந்த வகையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிக அற்புதமாக இருந்தது.
இதையும் படிங்க:தூபேக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது தெரிஞ்சுதான் தோனி அவரை யூஸ் பண்ணல.. ஆனால் ரோஹித் என்ன பண்ண போறாரு?
அதேபோல பந்து வீச்சாளர்களும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினர்” என்று கூறி இருக்கிறார். மேலும் இது குறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது “இக்கட்டான சூழ்நிலையிலும் பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்திய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் உண்மையிலேயே பாராட்டத்தக்க வகையில் இருந்தது” என கூறி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை இதே மைதானத்தில் அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

