ஐபிஎல் நல்லா ஆடுனா.. நேரா டெஸ்ட் மேட்ச்க்கு எடுத்துருவீங்களா.. என்ன சார் உங்க நியாயம்.. ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த கேள்விக்கு அஸ்வின் பதிலடி

2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டி தொடருக்காக உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் வருகின்ற சனிக்கிழமை முதல் தொடங்கயிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கேகேஆர் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

- Advertisement -

2025 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் புதிய மாற்றங்களுடன் களமிறங்க இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தை தொடர்ந்து ஐபிஎல் அணிகள் புதிய மாற்றங்கள் மற்றும் புதிய எழுச்சியுடன் களமிறங்க இருக்கின்றன. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றி கோப்பையை பெற்று தந்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணியின் நிர்வாகம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்திலும் எடுத்தது.

- Advertisement -

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டி தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராக முன்னணியில் இருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்பான நிகழ்ச்சியின் போது பேசிய பங்கேற்பாளர் ஒருவர், தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டால் அவரால் இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என தெரிவித்தார்.

- Advertisement -

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த நபர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் எவ்வாறு டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்ய முடியும்.? என கேள்வி எழுப்பினார். மேலும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் டி20 அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகரிக்குமே தவிர டி20 யில் சிறப்பாக விளையாடுவதை வைத்து ஒரு வீரரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய முடியாது எனவும் கூறினார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அனைத்து ஃபார்மேட்களையும் ஒன்றாக கலக்கக்கூடாது எனக் கூறினார்.

கடந்த 2023 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 500 ரன்களுக்கு மேல் குவித்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சில சர்ச்சைகளால் பிசிசிஐ நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி, சையத் அலி முஸ்தாத் கோப்பை என தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.

- Advertisement -

இதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு தேவைப்படும் நேரங்களில் கவுண்டர் அட்டாக் செய்து அதிரடியாகவும் ரன்களை குவித்து அசத்தியவர் ஸ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles