இன்று நடைபெற்ற 40ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி ப்ரித்விஷா 11 ரன்களிலும் அதிரடியாக விளையாடிய மெக்கர்க் 14 பந்துகளில் 23 ரன்களும் குவித்து வெளியேறினார்கள். பின்னர் களம் இறங்கிய அக்சர் பட்டேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முதலில் நிதானமாக விளையாடினார்.
பின்னர் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தி குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய அக்சர் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் குவித்தார்.
இந்தக் கூட்டணி கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோரின் ஒரு ஓவரில் 22 ரன்களும், மோகித் சர்மாவின் நான்கு ஓவர்களில் 73 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா 25 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் கில் ஆறு ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
பின்னர் இறுதிக் கட்டத்தில் ரசித் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் டெல்லி அணியை கதி கலங்க வைத்தனர். சாய் கிஷோர் ஆறு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 13 ரன்கள் குவித்து வெளியேற, கடைசி ஓவரில் வெற்றி இலக்குக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசிய முதல் இரண்டு பந்துகளையும் ரசித் கான் பவுண்டரிக்கு விளாசினார்.
அதற்குப் பிறகு இரண்டு பந்துகளையும் முகேஷ் குமார் டாட் பாலாக வீச ஐந்தாவது பந்தை ரசித் கான் சிக்ஸர்க்கு விளாசினார்.
இதையும் படிங்க:சிவம் தூபே அதுக்கு செட் ஆக மாட்டார்.. ஹர்திக் பாண்டியாதான் சரியாக இருக்கும்.. அம்பத்தி ராயுடு பேட்டி
கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அது டாட் பால் ஆக முடிய டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் 18.2 வது பந்தில் ரஷீத் சலாம் வீசிய பந்தை ரஷித் கான் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த ஸ்டெப்ஸ் அதனை அபாரமாக கேட்ச் செய்து பௌண்டரி எல்லைக்குள் பந்தை மீண்டும் வீசினார். இதனால் நான்கு ரன்கள் குஜராத் அணி இழந்தது. தற்போது அந்த நான்கு ரன்களே டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது.

