ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சொந்த மைதானம் என்பதால், டேவிட் வார்னருக்கு பிரியாவிடை அளிக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஆமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி 28 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கான வாய்ப்பு அமைந்ததாக பார்க்கப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், 3வது விக்கெட்டுக்கு 57 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆனால் ஹேசல்வுட் வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி பறிகொடுத்த, வெறும் 9 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பாகிஸ்தான்.
இதனால் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதனை பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் – ஆமிர் ஜமால் கூட்டணி தொடர்ந்தது. சிறிது நேரம் தாக்குபிடித்த ரிஸ்வான், 28 பந்தில் ஆட்டமிழக்க, பின்னர் ஜமால் 18 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலியா வெற்றிபெற 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் ஆஸ்திரேலியா அணிக்காக ஜாம்பவான் வீரர் டேவிட் வார்னர் கடைசி முறையாக களமிறங்கினார். அவருக்கு பாகிஸ்தான் அணி தரப்பில் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். இதன்பின் தொடக்க வீரர் கவாஜா டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் லபுஷேனுடன் இணைந்த டேவிட் வார்னர் அதிரடியில் பொளந்து கட்டினார். திரும்பிய பக்கமெல்லாம் பவுண்டரிகளை விளாசிய வார்னர், தனது கடைசி இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அசத்தினார். வெற்றிக்கு அருகில் சென்ற போது வார்னர் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் – ஸ்டீவ் ஸ்மித் இருவரும் வெற்றியை உறுதி செய்தனர். போட்டியை வென்ற பின் டேவிட் வார்னர் நேராக சென்று தனது மகள்களை கட்டியணைத்து உணர்வுகளை வெளிப்படுத்திய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ செய்தது.

