ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணியின் கடைசி ஆட்டம் என்பதால், அந்த ஆட்டத்தில் சென்னை அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பிரெவிஸ் 23 பந்துகளில் 57 ரன்களை குவித்தார்.
அன்சுல் கம்போஜ் அசத்தல்
பின்னர் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் – சாய் சுதர்சன் இணை தொடக்கம் கொடுத்தது. வழக்கத்திற்கு மாறாக சிஎஸ்கே அணி ஜடேஜாவை வைத்து தொடங்கியது. இதன்பின் கலீல் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரியை விளாசி அதிரடியை தொடங்கினர். ஆனால் அன்சுல் கம்போஜ் வீசிய 3வது ஓவரில் சுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த பட்லர் 4வது ஓவரிலேயே 5 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் அன்சுல் கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ரதர்ஃபோர்டு டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் குஜராத் அணி 5 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சீசனில் குஜராத் அணி பவர் பிளேவுக்குள் 3 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறையாகும்.
சிஎஸ்கே வெற்றி
இதன்பின் ஷாரூக் கான் – சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. இதில் சாய் சுதர்சன் அதிரடியாக பவுண்டரிகளை விளாச, இன்னொரு பக்கம் ஷாரூக் கான் சிக்சராக விளாசினார். அதிலும் சிவம் துபே பவுலிங்கில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 18 ரன்களை விளாசினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை குவித்தது.
ஆனால் ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ஷாரூக் கான் 19 ரன்களிலும், சாய் சுதர்சன் 41 ரன்களில் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. இதன்பின் வந்த ராகுல் டிவாட்டியா 14 ரன்களிலும், ரஷித் கான் 12 ரன்களிலும், கோட்ஸி 5 ரன்களிலும், அர்ஷத் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி 4வது வெற்றியை பெற்றுள்ளது.

