டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைக்க வேண்டும் என்பதே இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அடுத்த இலக்காக உள்ளது. அதாவது, ஒரே டி20 இன்னிங்ஸில் 200 ரன்கள் அடித்து, கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் சாதனையை முறியடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனின் ‘The Switch’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தனது ஆசை குறித்து வைபவ் பேசியுள்ளார். அப்போது அரைசதம் அடித்த பிறகு அதைக் கொண்டாடுவது பிடிக்குமா என்று பீட்டர்சன் கேட்டார். அதற்கு, “அவ்வளவாக இல்லை” என்று பதிலளித்தார் வைபவ்.
தொடர்ந்து டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வதா அல்லது இலக்கைத் துரத்தி விளையாடுவதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று அவர் கூறினார்.
அப்போது கெவின் பீட்டர்சன், மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் டி20 போட்டியில் 175 ரன்கள் அடித்திருப்பதை நினைவுபடுத்தினார். இதற்குப் பதிலளித்த வைபவ், “அவரது சாதனையை முறியடிக்க வேண்டும். நான் 200 ரன்கள் அடிக்க விரும்புகிறேன்” என்று தனது இலக்கைத் தெளிவாகக் கூறினார்.
கெய்ல் 2013 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளும் 17 சிக்ஸர்களும் அடங்கும். இன்றுவரை ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இந்தச் சாதனை நீடிக்கிறது.
ஏற்கெனவே இளம் வயதிலேயே பல சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, இப்போது கெய்லின் நீண்டகால சாதனையையும் குறிவைத்துள்ளார். அவரது இலக்கு வெறும் 175 ரன்களைக் கடப்பது மட்டுமல்ல; டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ரன்கள் அடிக்கும் வீரராக வரலாறு படைப்பதும்தான்.

