17வது ஐபிஎல் திருவிழா தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா ஒன்பது பந்துகளில் 12 ரன்கள் குவித்து வெளியேற, கெய்குவாட் 21 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
கடந்த நான்கு ஆட்டங்களாக கேப்டன் ருத்ராஜிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு களம் இறங்கிய அனுபவ வீரர் ரகானே ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, அதற்கு பிறகு களம் இறங்கிய ஆல்ரவுண்டர் சிவம் துபே அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். 24 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் விளாசிய நிலையில் கம்மின்சின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இறுதியில் ரகானே 35 ரன்கள் ஆட்டம் இழக்க, அதற்கு பிறகு களம் இறங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருத்ராஜ் பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும்படி இன்னமும் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்கவில்லை.
இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் மெதுவாகவே ஆரம்பித்து அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் அவுட் ஆகி விடுகிறார். எனவே இது கவலைக்குரிய விஷயமாக தற்போது அமைந்திருக்கிறது. எனவே கேப்டன் பொறுப்பு ருத்ராஜை மாற்றி இருக்கிறதா என்று இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் பயிற்சியாளர் மைக்கேல் ஹசியிடம் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஒன்றை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் ருத்ராஜ் சிறப்பாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பு ஒருவருடைய குணத்தை மாற்றுமா? என்று நான் தேடிய நிலையில் அவர் எப்பொழுதும் சீரானவராகவே இருக்கிறார். ஒரு போட்டிக்கு எப்போதும் தயாராவது போலவே தயாராகிறார். அவரைச் சுற்றி ஆதரவு எப்போதும் இருக்கிறது.
இதையும் படிங்க:வாரி வழங்கும் RCB பவுலர்ஸ்.. ராஜஸ்தானுக்கு எதிரா புண்ணியம் செய்ய கிடைக்கப் போகும் வாய்ப்பு.. நிறைய சிக்ஸ் கொடுங்க ரசிகர்கள் கோரிக்கை
களத்தில் அவருடன் மகேந்திர சிங் தோனி எப்போதும் இருக்கிறார். மேலும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் நான் இருக்கிறேன். மேலும் அணி வீரர்களும் அவருக்கு ஆதரவை கொடுக்கிறார்கள். எனவே இதுகுறித்து எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. மேலும் தனது யுத்திகள் மற்றும் கேப்டன்சி செயல்பாடுகளில் எப்போதுமே தெளிவாகவே இருக்கிறார். மேலும் களத்தில் தோனியை போலவே மிகவும் அமைதியாகவும், தெளிவாகவும் செயல்படுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

