நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுதாக அறிவித்தது. இதன்படி இன்னிங்சை ரகானே மற்றும் ரவீந்திரா ஆகியோர் தொடங்கினார்கள். இந்த முறை ஒன் டவுனில் களமிறங்கிய கேப்டன் ருத்ராஜ் 40 பந்துகளில் 5 பௌண்டரிகள், 5 சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்தார். சிவம் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என ஆட்டம் இழக்காமல் 66 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் ஆட்டத்தின் 19.2 வது ஓவரில் டாரி மிச்சல் ஆட்டம் இழக்க, ஹர்திக் பாண்டியாவின் ஓவரை எதிர்கொள்ள மைதானத்திற்குள் வந்தார் மகேந்திர சிங் தோனி. தான் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விளாசி, மொத்தமாக நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய மும்பை அணியும் 7 ஓவர்களில் 70 ரன்கள் என்று நன்றாகவே ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஒரு முனையில் நின்று விளையாட, மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாட போய் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.இதன் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
சென்னையின் பத்திரானா சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் ருத்ராஜ்
“எங்கள் இளம் விக்கெட் கீப்பர் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் போட்டியின் மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தது. இந்த மைதானத்தில் மேலும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். 215 ரன்கள் 220 ரன்கள் வரை கூடுதலாக எதிர்பார்த்தோம்.
இதேபோல பந்துவீச்சில் நாங்கள் இறுதி கட்ட ஓவர்களில் மிகவும் கவனம் செலுத்தினோம். பவர் பிளேவில் இந்த வகையான மைதானத்தில் 60 ரன்கள் கொடுப்பதாக இருந்தால் கொடுத்து விடுவேன். நீங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க:வீடியோ: 6,6,6.. எப்பா என்ன அடி.. ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தல தோனி.. வான்கடேவை அதிர வைத்த கரகோஷம்
எங்கள் அணியின் பேபி மலிங்கா இறுதிக்கட்டத்தில் சிறப்பான யாக்கர்களை வீசினார். மேலும் சர்துல் மற்றும் துஷார் தேஷ் பாண்டே ஆகியோரும் நன்றாக பந்து வீசினார்கள். அனைவரையும் நாங்கள் ஊக்குவித்தோம்” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியின் மூலம் சென்னை அணி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

