சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விசாகப்பட்டினத்தில் இன்று எதிர்கொள்ள உள்ளது. போட்டிக்காக இரண்டு அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இரண்டு போட்டியிலும் அற்புதமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியில் இறங்கும் தொடக்க ஆட்டக்காரர் முதல் ஏழாம் கட்ட பேட்ஸ்மேன் வரை அனைவருமே அதிரடியாகவும், நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாட கூடியவர்கள் என்பதால் பேட்டிங்கில் மிக வலுவாகவே உள்ளது. பந்துவீச்சிலும் இலங்கை அணி வீரர் பத்திரானா மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும் பந்துவீச்சாளர்கள் தங்களது குறைகளை சரி செய்து கொண்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினர். எனவே இரண்டு நிலையிலும் சென்னை அணி மிக வலுவாக உள்ளது. ஆனால் டெல்லி அணியை பொருத்தவரை முதல் இரண்டு பேட்ஸ்மேன்களுக்கு பிறகு போட்டியை கடைசிவரை எடுத்துச் சொல்லக்கூடிய தரமான பேட்ஸ்மேன்கள் அவர்களிடம் இல்லாதது பெரிய குறையாக உள்ளது.
ரிஷப் பந்த் தற்போது பேட்டிங்கில் வலு சேர்த்தாலும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் தற்போது அவரது பார்ம் கவலை அளிக்க கூடிய விதமாக உள்ளது. மேலும் பந்துவீச்சை பொறுத்த வரையில் இசாந்த் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் சாம்பியன் பந்துவீச்சாளர்களும் அவர்களிடம் இல்லை.
எனவே பலமான சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணி எவ்வாறு செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் சிஎஸ்கே டெல்லி அணியுடனான போட்டி குறித்து டெல்லி அணியின் தலைமை பயர்ச்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில்
“நாங்கள் இந்த சீசனில் விளையாடிய கிரிக்கெட் பற்றி இரண்டு முறை கலந்தாலோசித்த விதத்தில் நல்ல கிரிக்கெட்டும் மோசமான கிரிக்கெட்டும் சரிசமமாக விளையாடியுள்ளோம்.
அதாவது நாங்கள் களத்தில் இறங்கி 40 ஓவர்கள் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டியது அவசியம். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இசாந்த் சர்மா காயம் காரணமாக வெளியேறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். இருப்பினும் வலுவான அணியான சிஎஸ்கேவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.
இதையும் படிங்க:முதல்ல கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு.. ஆனா முதல் பந்து வீசினதுக்கு அப்புறம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் பேட்டி
ஐபிஎல் தொடர் குறுகிய வடிவம் கிடையாது. இரண்டு போட்டிகளில் தோற்றாலும் இன்னும் 12 போட்டிகள் எஞ்சியுள்ளது. ஆனாலும் நீங்கள் எப்போதும் தொடரை வெற்றிகரமாகவே தொடங்க விரும்புவீர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பாசிட்டிவான அணுகுமுறையை வெளிப்படுத்த உள்ளோம். முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும் அடுத்த போட்டியில் களத்தில் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்த உள்ளோம். எதையும் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கும் மனநிலையில் நாங்கள் தற்போது இல்லை” என்று கூறி இருக்கிறார்.

