இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மாலை சேப்பாக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிகளும், மிகத் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய புதிய கேப்டனான 27 வயது ருத்ராஜ் கெய்க்வாட் வழி நடத்த உள்ளார். நேற்று நடைபெற்ற கேப்டன்கள் கூட்டத்தில் சென்னை அணியின் சார்பில் மகேந்திர சிங் தோனி கலந்து கொள்ளவில்லை மாறாக ருத்ராஜ் கலந்து கொண்டதால் அப்போதே சிறு சந்தேகம் வலுத்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தங்களது புதிய கேப்டனை அறிவித்தது.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் என்பதால் தோனியை கடைசி சீசனில் கேப்டன் ஆகவே பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணினார். ஆனால் அதற்கு தற்போது வழியில்லை. இருப்பினும் புதிய கேப்டனின் செயல்பாடுகளை பார்க்க ஆர்வமாகவும் உள்ளது.
இந்த கேப்டன்சி தகவல் குறித்து ருத்ராஜிற்கு முன்னரே தெரிந்ததா? அல்லது சமீபத்தில்தான் அவருக்கு தெரிவிக்கப்பட்டதா? ஒரு கேப்டனாக அவர் மனதளவில் தேறிவிட்டாரா? என்பது குறித்து இன்றைய முதல் போட்டியில் அதற்கான விடை கிடைத்து விடும். கேப்டன்சியை விட்டு விலகியதால் மனதளவில் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும் தோனி இந்த சீசன் முழுவதும் களமிறங்கி விளையாடுவாரா? அல்லது இம்பாக்ட் பிளேயர் விதியில் இறங்குவாரா? என்பது குறித்து ரசிகர்களின் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இதுகுறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனியின் உடல்நிலை குறித்து எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடுவார் என்று கூறி இருக்கிறார். மேலும் இது குறித்த அவர் கூறுகையில்
“மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் மிகவும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது முந்தைய சீசனை விட நடப்பு சீசனில் அவரின் உடல் தகுதி மிகவும் பிட்டாக இருக்கிறது. கடந்த சீசனில் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமாகி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். எனவே கடந்த ஆண்டை விட அவரது உடல்நிலை மிகவும் வலுவாகவே உள்ளது.
எனவே அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடுவார் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயமாகும்” என்று கூறியிருக்கிறார். எனவே மகேந்திர சிங் தோனி இனி ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று கேப்டன்சி செய்வதை பார்க்க முடியவில்லை என்றாலும் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேன் ஆகவும் களமிறங்கி ரசிகர்களை மகிழ்விப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

