17வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தற்போது விளையாடி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் வழக்கமாக டாஸ் ஜெயித்து பவுலிங் தேர்வு செய்யும் அணிகளுக்கு மத்தியில் டெல்லி அணி டாஸ் வென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத பிரித்விஷா இந்த போட்டியில் களமிறங்கினார். டெல்லி அணியின் இன்னிங்சை டேவிட் வார்னரும் பிரித்விஷாவும் தொடங்கி வைத்தனர். மிச்சல் மார்ஸ் மிடில் ஆர்டருக்கு அனுப்ப பட்டார்.
சென்னை அணியின் முதல் ஓவரை தீபக்சகார் வீச, அதனை பொறுமையாக எதிர்கொண்டது டெல்லி அணி. பவர் பிளேவின் முதல் மூன்று ஓவர்கள் வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த மூன்று ஓவர்கள் முடிவதற்குள் 62 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது. இரண்டு போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டதற்கு தகுந்த பதில் அடியை டெல்லி அணிக்கு வழங்கினார் பிரித்விஷா.
பவர் பிளே முடிந்து ஸ்பின்னரை கேப்டன் கொண்டு வர, ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் இருவரும் சிக்சர்களைப் பறக்க விட்டனர். வழக்கமாக இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் சென்னை அணியை முதன்முதலாக டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியது. டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதைப் போல ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. 9.3 ஓவர்களில் 93 ரன்கள் குவித்த நிலையில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.
டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து இருந்த நிலையில், முஸ்தபிர் ரஹ்மானின் பந்துவீச்சில் வார்னர் பின்னால் திரும்பி அடிக்க முயற்சிக்க, உள் வட்டத்திற்குள் பீல்டிங் நின்று கொண்டிருந்த பத்திரானா காற்றில் பறந்து வந்த அந்த பந்தை அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனை யாருமே எதிர்பார்க்காத நிலையில் பத்திரானாவின் அந்த அற்புதமான கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
பத்திரானா அந்த கேட்சை எடுக்கும் போது அருகில் இருந்த மகேந்திர சிங் தோனி அவரைக் கைதட்டி வெகுவாகப் பாராட்டினார். அவரைத் தவிர சென்னை அணி வீரர்களும் சிறிது நேரம் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே இல்லை.. கப் அடிக்க இந்த ரெண்டு டீம்க்கு அதிக வாய்ப்பு இருக்கு.. சொல்கிறார் முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரர்
இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள டில்லி அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. சென்னை அணியும் பந்து வீச சற்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
CATCH OF THE SEASON BY PATHIRANA….!!!! 🤯🦅 pic.twitter.com/jXVkcxJLQ2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2024

