நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி இது வரை விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து போட்டிகளில், வெற்றியும் ஐந்து போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்பது போல் தெரிகிறது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில் கட்டாயம் மூன்று போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.
அப்படி வெற்றி பெற்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை தற்போது மோசமாகி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பௌலராக திகழ்ந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிக்குர் ரஹ்மான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியோடு ஐபிஎல்லில் இருந்து விலகினார்.
பிறகு அதே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் தீபக்சகர் காயம் காரணமாக வெளியேறினார். அவர் இந்த ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகளில் பங்கு பெற மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன துஷார் தேஷ் பாண்டேவும் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இவரும் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமே. மேலும் இலங்கை அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களான தீக்ஷானா மற்றும் பத்திரனா ஆகியோர் டி20 உலக கோப்பைக்காக அமெரிக்கா செல்வதற்காக விசாவை புதுப்பிக்க இலங்கை சென்று இருப்பதால் அவர்களும் தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது சிக்கலாகி இருக்கிறது.
இந்த நிலையில் நான்கு போட்டிகளில் மூன்றில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சென்னை அணி வெற்றி பெறுமா என்பது நிச்சயம் சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டரும் தற்போது நிலையானதாக இல்லை.
இதையும் படிங்க:வருத்தப்பட வேண்டாம் ரிங்கு சிங்.. உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.. ஆறுதல் வார்த்தைகள் கூறும் முன்னாள் பிசிசிஐ தலைவர்
சிஎஸ்கேவின் ஜடேஜா, ரகானே, சமீர் ரிஸ்வி, மொயின் அலி ஆகியோர் பேட்டிங்கில் பார்ம் இன்றி திணறி வருவதால் பந்து வீச்ச் மற்றும் பேட்டிங் என இரண்டுமே சிஎஸ்கேவிற்கு தற்போது பெரிய தலைவலியாக உள்ளது. இந்த சிக்கல்களை முறியடித்து சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நாளை தரம்சாலாவில் எதிர்கொள்ள உள்ளது.

