இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டெல்லி அணி வகுத்த திட்டத்தைப் போலவே தொடக்கத்தில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியது. அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் என்று அழைக்கப்படும் எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்டை டெல்லி விரைவிலேயே வீழ்த்தியது.
ஜெய்ஸ்வால் ஐந்து ரன்களில் முகேஷ் குமாரின் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, ஜாஸ் பட்லர் 11 ரன்களில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மேலும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்போட்டியில் 15 பந்துகளில் 14 ரன்கள் குவித்து வெளியேறினார். இப்படி 36 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ராஜஸ்தான் அணியை அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பராக் ஆகியோர் கரை சேர்த்தனர்.
அஸ்வின் 29 ரன்கள் குவிக்க, ரியான் பராக் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது. டெல்லி அணித்தரப்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதை அடுத்து 186 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி தொடக்கம் சரியாக அமைந்த போதும் அதற்கு பின்னல் வந்த பேட்ஸ்மேன்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவற விட்டனர்.
தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 49 ரன்கள் குவித்தார். மேலும் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட் 26 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். இதனால் கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட, ராஜஸ்தான் அணியின் ஆவேஷ்கான் கடைசி ஓரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. தோல்விக்குப் பிறகு ரிஷப் பந்த் கூறுகையில்
“நிச்சயமாக ஏமாற்றமாக உள்ளது. இந்த போட்டியின் மூலம் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் கற்றுக் கொள்வது மட்டுமே. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் 15 முதல் 16 ஓவர்கள் வரை நன்றாக பந்து வீசினார். பேட்டர்கள் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். மார்ஸ் மற்றும் வார்னர் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் பின்னால் வந்த பேட்ஸ்மேன் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர். மேலும் ஆட்டத்தின் பாதியில் சில விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நார்ஜே இறுதி கட்டத்தில் பந்து வீச வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் ரன்களையும் விட்டுக் கொடுத்தோம். அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதன்மூலம் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது.

