ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடுகிறது. துபாய் மைதானத்தில் இந்த ஆட்டம் நடப்பதால், இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் 2021 டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப் தோல்விக்கு இந்திய அணி பழி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் ஒப்பந்தம்
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை ஆடி இருக்கும் 4 போட்டிகளில் 2 அரைசதங்கள் உள்பட 195 ரன்களை விளாசி இருக்கிறார். விராட் கோலிக்கு பின் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் உயர்ந்துள்ளார். இதனால் ஸ்ரேயஸ் ஐயரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதிலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்தார். இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ தரப்பில் சிறப்பான பரிசு ஒன்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பின், அவருக்கு மீண்டும் எந்த ஒப்பந்தமும் கொடுக்கப்படவில்லை.
ரோகித் சர்மா முடிவு
இதனால் இம்முறை பிசிசிஐ ஒப்பந்தத்தில் அவருக்கு ஏ கிரேடு ஒப்பந்தம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கமாக பிசிசிஐ தரப்பில் பிப்ரவரி மாதம் ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்படும். ஆனால் இம்முறை டெஸ்ட் தொடரில் பும்ராவை தவிர்த்து அனைத்து வீரர்களும் மோசமான செயல்பட்டுள்ளதால், சாம்பியன்ஸ் டிராபி வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கேற்ப சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு இந்திய அணி முன்னேறி இருப்பதால், அடுத்த வாரத்தில் பிசிசிஐ ஒப்பந்தம் விவரங்கள் வெளியிடப்படவுள்ளது. அதில் ஏ+ ஒப்பந்தப் பட்டியலில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகிய மூவரையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ரோகித் சர்மாவின் முடிவை அறிந்த பின் ஒப்பந்தம் பட்டியல் முடிவாகும்.

