இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், போட்டிக்கான முதல் கால அட்டவணை மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், லோக்சபா தேர்தலின் காரணமாக பிசிசிஐ முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டது. பின்னர் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இரண்டாம் கால அட்டவணையை வெளியிடப் போவதாக அறிவித்தது.
இந்நிலையில் திடீரென பிசிசிஐ அதிகாரிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று துபாய், சார்ஜா போன்ற பகுதிகளில் போட்டியை நடத்துவது குறித்து அங்குள்ள கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சிக்கலான நிலைக்கு லோக்சபா தேர்தல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னர் இருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டபோது பலகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. எனவே இந்த முறையும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால் எந்த தேதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுமோ அந்த தேதிகளில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம். எனவே போட்டிகளை குறித்த தேதியில் நடத்துவதற்கு பிசிசிஐக்கு சிக்கல் ஏற்படும்.
இதனால் ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு பிசிசிஐ போட்டி நடத்தப்படும் அட்டவணையை வெளியிடவில்லை. ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் ஏப்ரல், மே தேதிகளில் ஐபிஎல்க்கு சிக்கல் ஏற்படலாம். இதனால் பிசிசிஐ முன்னெச்சரிக்கையாக துபாய்க்கு சென்று அந்த மாதங்களில் போட்டி நடத்துவது குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதை முன்னரே அறிந்த ஐபிஎல் அணிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்தியா அல்லாமல் வேறு நகரங்களுக்கு போட்டியை மாற்றினால் போக்குவரத்து, ஹோட்டல் அறைகள் மற்றும் வீரர்களுக்கான தங்கும் வசதி என இரு மடங்கு செலவு அதிகரிக்கும். மேலும் இந்தியாவில் உள்ள ரசிகர்களைப் போல் அல்லாமல் வெளிநாட்டில் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் சற்று குறைவாகவே இருக்கும் என்பதால் டிக்கெட்டுக்கள் விற்பனையும் மந்தமாக இருக்கும். இதனால் ஐபிஎல் அணிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கும் போட்டியை வேறு நகரங்களுக்கு மாற்றினால் ஏமாற்றமாகவே இருக்கும். இருப்பினும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது எந்த சிரமமும் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. எனவே இம்முறை அது போலவே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். மேலும் இந்திய அணிக்கும் ஐபிஎல் முடிந்த சில நாட்களிலேயே உலகக் கோப்பை தொடர நடைபெறுவதால், ஐபிஎல் தொடரை குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

