ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய மிட்சல் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்களும், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களையும் விளாசினர்.
டெல்லி அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்பின் 210 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்கு மெக்கர்க் – டூ பிளசி இணை தொடக்கம் கொடுத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கர்க் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, பின் வந்த அபிஷேக் போரெல் டக் அவுட்டாகினார்.
இதனால் லக்னோ அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 2வது ஓவரில் ரிஸ்வி 4 ரன்களில் ஆட்டமிழக்க, அக்சர் படேல் களமிறங்கினார். பின்னர் இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்க, திக்வேஷ் ராத்தி பந்தில் அக்சர் படேல் 22 ரன்களில் வெளியேறினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களை சேர்த்திருந்தது.
விப்ராஜ் ட்விஸ்ட்
பின்னர் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்தனர். ரவி பிஷ்னாய் வீசிய 7வது ஓவரில் டூ பிளசி 29 ரன்களில் வெளியேற, ஸ்டப்ஸ் – அஷுதோஷ் சர்மா கூட்டணி போராடியது. இதன் காரணமாக 12 ஓவர்களில் லக்னோ அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. இதன்பின் மணிமாறன் சித்தார்த் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஸ்டப்ஸ், அடுத்த பந்தில் 34 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார்.
இதையடுத்து டெல்லி அணியின் தோல்வி உறுதி என்று பார்க்கப்பட்ட போது, திடீரென களம் புகுந்த விப்ராஜ் நிகம் பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டினார். இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதன்பின் சிறப்பாக ஆடிய விப்ராஜ் 15 பந்துகளில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டார்க் களம் புகுந்தார்.
அஷுதோஷ் சர்மா மாஸ்
ஆனால் அவரும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் மொத்தமும் அஷுதோஷ் சர்மா கைகளுக்கு சென்றது. அதற்கேற்ப 6,4,6 என்று விளாச, டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த ஓவரில் குல்தீப் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, 10 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் அஷுதோஷ் சர்மா இருக்க, ஆட்டம் பரபரப்பானது.
அப்போது அஷுதோஷ் சர்மா சிக்ஸ் மற்று பவுண்டரி அடிக்க, கடைசி 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது 2வது பந்தில் மோகித் சர்மா ஒரு ரன்னை எடுத்து அஷுதோஷ் சர்மாவை ஸ்ட்ரைக்கில் கொண்டு வந்தார். அதன்பின் அஷுதோஷ் சர்மா சிக்ஸ் அடித்து தனியாள வென்று கொடுத்தார். இதனால் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

