ஐபிஎல் தொடரின் 59 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. வெற்றிக்கான காரணம் குறித்து குஜராத் அணியின் கேப்டன் கில் முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது. மிகவும் சிறப்பாக விளையாடிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸருடன் 103 ரன்கள் குவிக்க, கில் 55 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தது போல் சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஆடுகளம் பேட்டிக்கு சாதகமாக இருந்ததால் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேஷ் பாண்டே மட்டும் நான் ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு இந்த மெகா இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தாலும், அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த மிச்சல் மற்றும் மொயின் அலி ஜோடி ஓரளவு சென்னை அணியை காப்பாற்றியது. அதற்குப் பிறகு அவர்களாலும் மீட்க முடியவில்லை மிச்சல் 63 ரன்களிலும் மொயின் அலி 56 ரன்களிலும் ஆட்டம் இழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருபது ஓவர்களில் 196 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு குவித்தது.
இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் குஜராத் அணியின் கேப்டன் கில் கூறும் பொழுது
“பேட்டிங் முடித்த பிறகு எனக்கு காலில் கொஞ்சம் தசை பிடிப்பு இருந்த காரணத்தினால்தான் பீல்டிங் செய்ய வர முடியவில்லை. உங்களை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ஆதரிக்கும் போது உங்களுக்கு எல்லாமே சாதகமாக அமைவது போல் தோன்றும். நாங்கள் பேட்டிங் செய்யும்போது எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது.
அதனால் எந்த டார்கெட்டும் நாங்கள் வைத்துக் கொள்ளாமல் முழு சுதந்திரத்துடன் விளையாடினோம். சாய் சுதர்சன் இந்த போட்டியில் அபாரமாக விளையாடினார். எங்களுக்கு எப்போதுமே ஆடுகளத்தில் ஒரு நல்ல நட்பு இருக்கும். நாங்கள் கடந்த சீசனில் நிறைய முறை ஜோடி சேர்ந்து இதுபோல் விளையாடி இருக்கிறோம். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடுவது எப்போதுமே நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க:எங்க 2 டீமுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அவங்க அந்த விஷயத்தை சரியா பண்ணாங்க.. தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ்
மோகித் சர்மா பாய் கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு நிறைய செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு இந்த சீசனில் இரண்டு மூன்று போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் செயல்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் ஒரு கட்டத்தில் 250 ரன்கள் குவித்து விடுவோம் என்று நிலையில் இருந்தோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இறுதியில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். மேலும் நாங்கள் இறுதியில் போட்டியை கைவிடவில்லை” என்று கூறி இருக்கிறார்.

