இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராராவில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த சதத்தின் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் இந்த முறை பேட்டிங் தேர்வு செய்தார். ஏற்கனவே முதல் போட்டியில் தோற்று இருந்த இந்திய அணி இந்த முறை வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கியது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் கலீல் அகமதுவுக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சன் இன்றைய போட்டியில் அறிமுகம் ஆனார்.
இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் கில் நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு ருத்ராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி நிதானமாக ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை எதிர்கொண்டது. முதல் ஆறு ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில், அதற்குப் பிறகு இந்திய அணி கியரை மாற்றியது.
இந்த போட்டியில் 33 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் ஷர்மா குறிப்பாக அதற்குப் பிறகு போட்டியை டாப் கியரில் எடுத்துச் சென்றார். குறிப்பாக 14வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அடுத்த 13 பந்துகளில் மற்றொரு 50 ரன்கள் குவித்தார். அதாவது முதல் 50 ரன்கள் 33 பந்துகளும், அடுத்த ஐம்பது ரன்களுக்கு வெறும் 13 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்ட அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதில் ஏழு பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். 100 ரன்கள் அடித்த நிலையில் நாப்பத்தி ஏழாவது பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்தப் போட்டியின் மூலம் அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். மேலும் அறிமுகமான குறைந்த போட்டியிலேயே சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க:எனக்குத் தெரியும் தோனிக்கு இது பிடிக்காதுன்னு.. ஆனா எனக்கு இது ரொம்ப பிடிக்கும்- ஜடேஜாவின் வாழ்த்து
தற்போது இந்திய அணி 17 ஓவர்களில் 192 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது ருத்ராஜ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இதில் ருத்ராஜ் 66 ரன்களும் ரிங்கு சிங் 18 ரன்களும் குவித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மூன்று ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய இலக்கை டார்கெட்டாக வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

