ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் அபார சதம் காரணமாக 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களை குவித்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ரிக்கல்டன் – பவுமா இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 20 ரன்கள் சேர்த்த போது, ரிக்கல்டன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின் பவுமா – ரஸி வாண்டர் இணை இணைந்து அபாரமாக விளையாடியது. சிறப்பாக ஆடிய பவுமா 56 ரன்கள் எடுத்து திடீரென ஆட்டமிழந்தார்.
சீட்டுக் கட்டாக சரிந்த தென் ஆப்பிரிக்கா
பின் ரஸி வாண்டரும் 66 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் சரிவு தொடங்கியது. அதிகம் நம்பிய கிளாசன் 3 ரன்களிலும், மார்க்ரம் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மில்லர் மட்டும் ஒருபக்கம் அதிரடியாக ஆடினார்.
ஆனால் அவருக்கு யாரும் கம்பெனி கொடுக்கவில்லை. முல்டர் 8 ரன்களிலும், மார்கோ யான்சன் 3 ரன்களிலும், மகாராஜ் 1 ரன்னிலும், ரபாடா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆறுதல் அளிக்கும் பட்சமாக மில்லர் மட்டும் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதியானது.
சதம் விளாசிய மில்லர்
கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து மில்லர் சதம் விளாசி ஆறுதல் அளித்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சிறப்பாக ஆடிய மில்லர் 67 பந்துகளில் 100 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இதனால் மார்ச் 9ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதனால் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

