ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழி நடத்திய பும்ரா காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் பும்ரா குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு பிறகு ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தொடர்ந்து தோல்வியில் பயணித்த இந்திய அணி ஐந்தாவது போட்டியில் இருந்து மீண்டும் கேப்டனாக பும்ரா பொறுப்பேற்றார். இருப்பினும் பும்ரா காயம் காரணமாக பாதியில் வெளியேறியதை தொடர்ந்து அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
இந்த சூழ்நிலையில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக பும்ராவை அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்க போவதாக பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும்அவருக்கு காயம் ஏற்படும் பிரச்சனை இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பும்ராவை முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன்னால் ஒன்றுக்கு இரண்டு முறை இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் விக்கெட் எடுப்பதிலும் தனது உடல் தகுதியை பராமரிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு கூடுதல் பொறுப்பை கொடுப்பது கூடுதலாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தும்.
பும்ரா ஒரு தங்க முட்டை இடும் வாத்து. எனவே அந்த வாத்தின் மீது அதிக அழுத்தத்தை கொடுத்து அதனை கொல்லக் கூடாது” என்று முகமது கைப் தெரிவித்து இருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறினால் அவருக்கு பதிலாக இந்த இரண்டு பேட்ஸ்மேன்களில் ஒருவர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம்.

