டி20 உலக கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் தான் சிறப்பாக விளையாடியது குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் விரைவிலேயே வெளியேறினாலும், ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி நிதானமாக மட்டும் இல்லாமல் அதே நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது அதிரடியாகவும் விளையாடி இந்திய அணி ரன் வேகத்தை வெகுவாக உயர்த்தியது.
இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் மூலம் 37 பந்துகளில் 60 ரன்கள் பெற்றது இந்திய அணி. இதனால் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் ரசித் கான் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தி இருந்தார். அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணி வீரர்களின் அபார பந்துவீச்சு தாக்குப் பிடிக்க முடியாமல் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்தது.
சிறப்பாக பேட்டிங் செய்து இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி குறித்து சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “இந்தப் போட்டிக்காக கடின உழைப்புகள் நிறைய இருக்கிறது. எப்போதும் வழக்கமான அழுத்தம் மற்றும் நிறைய வேலைகள் என்று பின் தொடர்ந்து கொண்டே வருகிறது. நான் என்ன செய்தால் இந்திய அணிக்கு நல்லது என்று எனது திட்டத்தில் தெளிவாக இருந்தேன்.
இந்த விருது பந்துவீச்சாளருக்கு கொடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளிலும் பந்துவீச்சாளருக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுத் திட்டத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விளையாடுவது என்பது மிகவும் அவசியம். ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய உள்ளே வந்த போது என்ன சொன்னேன் என்பது பற்றி எனக்கு நினைவிருக்கிறது.
இதையும் படிங்க:அடேங்கப்பா.. 17 வருடங்கள் கழித்து சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்.. 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஒரே வேகத்தில் அதிரடியாக விளையாடுவோம். விக்கெட்கள் விரைவாக விழுந்ததால் கவலைப்பட தேவையில்லை 180 ரன்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம். என்று கூறித்தான் இருவரும் விளையாட ஆரம்பித்தோம். நாங்கள் நினைத்த ரன்கள் வந்ததில் மகிழ்ச்சி” என்று சூரியகுமார் யாதவ் கூறி இருக்கிறார். இந்த சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி அடுத்த போட்டியில் வங்கதேச அணியை சந்திக்க உள்ளது.

