ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசங்க அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இருக்கிறது.
இதில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் ஆன பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
ஆன்ட்டிகுவாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இன்னிங்ஸ் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டான்சிட் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். டான்சிட் ஹாசன் ஜீரோ ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேற, அவரைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் பதினாறு ரண்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் சான்டோ நிதானமாக விளையாடி 36 பந்துகளில் ஐந்து பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 41 ரன்கள் குவித்து ஜாம்பாவின் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு தவ்ஹீத் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உடன் 40 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, வங்கதேச அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட, டக்வார்த் லீவிஸ் விதிப்படி பதினோரு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் குவித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதில் வார்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஒரு மகத்தான சாதனையை படைத்தார்.
ஆட்டத்தின் 18 வது ஓவரின் 5வது பந்தில் முகமதுல்லாவை இரண்டு ரன்னில் போல்ட் ஆக்கிய கம்மின்ஸ் அடுத்ததாக வந்த மெகதி ஹாசனை கோல்டன் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தை ஹ்ரிடாயை வெளியேற்றிய கம்மின்ஸ் இதன் மூலம் மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 17 வருடங்கள் கழித்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றார்.
இதையும் படிங்க:இவரை கவனமா பயன்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.. எதையும் செய்ய தயாராக உள்ளார்.. ரோஹித் சர்மா பேட்டி
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இதே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ப்ரட்லீ ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அவருக்குப் பிறகு கம்மின்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையையும் கம்மின்ஸ் படைத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

